துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்: தரமற்ற கட்டிடங்கள் தொடர்பாக 113 பேருக்கு பிடிவாரண்டு

அங்காரா,

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை.

கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி நிலநடுக்கத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இரு மடங்காக உயரும் அச்சம்

ஆனால் இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. அதாவது பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது.

அதே சமயம் இருநாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தைகள் உள்பட பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று துருக்கியின் கஹ்ராமன்மரஸ் மாகாணத்தில், பிறந்து 7 மாதங்களான பச்சிளம் ஆண் குழந்தை உள்பட ஒரு டஜனுக்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்தாகி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதேபோல் சிரியாவின் ஜப்லே நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 23 வயது இளைஞர் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

வாட்டி வதைக்கும் குளிர்

இதனிடையே சிரியாவின் தெற்கு பகுதியில் நிலவும் அமைதியின்மையால் ஒரு சில இடங்களில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹடாய் மாகாணத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் மீட்பு பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இதனால் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினரின் பாதுகாப்புடன் மீட்பு பணிகள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இருநாடுகளிலும் வாட்டி வதைக்கும் குளிர் மீட்பு குழுவினர் தங்களது பணிகளை தொடர்வதை சவாலாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கட்டிட ஒப்பந்ததாரர்கள் கைது

இந்த நிலையில் துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கட்டுமானங்கள் தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 113 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 134 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை நீளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் பல ஆண்டுகளாகவே, உள்ளூர் ஊழல் மற்றும் அரசாங்க கொள்கைகள் காரணமாக நாட்டில் உள்ள பல புதிய கட்டிடங்கள் பாதுகாப்பற்றதாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.