புதுடெல்லி: “பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் அவைக்கு புறம்பான நடவடிக்கைகளுக்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் தனது உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி இழக்க வேண்டி வரும்” என்று பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துகளுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பிகள் நிஷிகாந்த் துபே, பிரகலாத் ஜோஷி ஆகியோர் சிறப்பு உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இந்த நோட்டீஸுக்கு புதன்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற செயலகம் ராகுல் காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய துபே கூறுகையில், “சபாநாயகருக்கு முன்கூட்டியே நோட்டீஸ் எதுவும் வழங்காமல் நமது பிரதமர் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளை நீங்கள் எழுப்ப முடியாது. நாங்கள் அளித்திருக்கும் நோட்டீஸில் பிப்.15-ம் தேதிக்குள் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி முன்வைத்த குற்றசாட்டுகளிக்கான ஆதாரங்களை சபாநாயகர் முன் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களவையில் அவரது பதவியை இழக்க நேரிடும்” என்றார்.
இதற்கிடையில், பிப்.8-ம் தேதி பாஜக எம்.பி. துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில், “ராகுல் காந்தி தனது பேச்சிற்கான ஆவண ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனாலும் இதுவரை எந்தவிதமான ஆதாராபூர்வமான ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சு, அவையை தவறாக வழிநடத்துவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்கு கலங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது.
இந்த நடவடிக்கை, அவை மற்றும் உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செயல் மற்றும் அவை நடவடிக்கைக்கு புறம்பான, அவமதிக்கும் செயலுமாகும். இதனால், ராகுல் காந்தி மீது சிறப்பு உரிமை மீறல் மற்றும் அவையை அவமதித்தல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
பிப்.7-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை ஆற்றிய ராகுல் காந்தி, அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து அரசாங்கத்தை குற்றம் சாட்டியிருந்தார். 2014-ல் ரூ.66,000 கோடியாக இருந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2022-ல் ரூ.11.58 லட்சம் கோடியானது எப்படி? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமருடனான நெருக்கத்திற்கு பின்னர் இது நிகழ்ந்ததாகவும், அந்த கோடீஸ்வர தொழிலதிபருக்காக பல துறைக்களில் விதிகள் மாற்றப்பட்டன என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.