*வெளிநாடு ஏற்றுமதியும் சரிந்ததால் விசைத்தறி கூடங்கள் மூடல்
சேலம் : நூல், பஞ்சு விலை உயர்வு, ஒன்றிய பட்ஜெட்டில் கைவிரிப்பு போன்ற காரணங்களால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ₹150 கோடிக்கு டவல்கள் தேக்கமடைந்து உள்ளது. வெளிநாடு ஏற்றுமதி சரிந்ததால் பல விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், விருதுநகர், கரூர், காஞ்சிபுரம், திருபுவனம், கும்பகோணம் உள்பட பல பகுதிகளில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் இருந்து அபூர்வா ஜரிகை சேலை, காட்டன் டவல், வேஷ்டி, சேலை, துண்டு, ஜமுக்காளம், ேபார்வை, ஏற்றுமதி ஜவுளிகளும், கைத்தறியில் இருந்து பட்டுச்சேலை, வேட்டி, துண்டு உள்பட பல ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜவுளி உற்பத்தியை பொறுத்தமட்டில் 2014க்கு முன்புவரை நல்லமுறையில் இருந்தது. அதன்பின்பு வந்த ஒன்றிய ஆட்சியாளர்கள் ஜவுளித்துறையை பொருட்படுத்தாததால், நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ₹54 ஆயிரத்துக்கு விற்றது. இது படிப்படியாக உயர்ந்து கடந்த மே மாதத்தில் ₹1 லட்சத்து 5 ஆயிரம் வரை விலை ஏறியது. இது ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் நூல் விலையையும் ஒன்றிய அரசு அதிகரித்ததால், பல ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியை குறைத்தனர்.
காட்டன் நூலுக்கு பதிலாக ரயான் நூலில் ஜவுளியை உற்பத்தியை தொடங்கினர். இதனால், வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரத்து சரிந்ததால் பல விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டது. தறிகளை பழைய இரும்பு கடைக்கு கிலோ கணக்கில் எடைக்கு போட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜவுளித்துறை தொடர்பாக பட்ஜெட்டில் சலுகையோ, வளர்ச்சிக்கான திட்டங்களோ வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை விசைத்தறி மற்றும் கைத்தறிக்கான வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில் 2023-24க்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தார். அதில் விசைத்தறி, கைத்தறிக்கு சலுகைகள், பஞ்சு விலை குறைப்பு, வெளிநாட்டு ஜவுளி ஆர்டர்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டு ஆர்டர் இல்லாததால் பல விசைத்தறி உரிமையாளர்கள் டவல் உற்பத்திக்கு மாறியுள்ளனர்.
இதனால் டவல் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் போதிய விற்பனை இல்லாமல் ₹150 கோடிக்கான டவல்கள் தேக்கமடைந்துள்ளது. இந்த தேக்கத்தை போக்க, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையுடன் டவல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.