பாராளுமன்றம் எதிர்வரும் 21 முதல் 24 வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்மையில் (10) புதிய கூட்டத்தொடரில் முதன்முறையாகக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெப்ரவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இலங்கைத் தேயிலைச் சபை சட்டத்தின் கீழ் 2245/29, 2248/36, 2248/37 மற்றும் 2258/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட நான்கு ஒழுங்குவிதிகள் மற்றும் கப்பனிச் சட்டத்தின் கீழ் 2303/07 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

பெப்ரவரி 22 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல்  பி.ப. 5.00 மணி வரை கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2299/46 மற்றும் 2299/47 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளன. அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 23 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2309/40, 2311/08 மற்றும் 2311/18 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2290/24 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதன் பின்னர், இரண்டு தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் மற்றும் ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாம் மதிப்பீட்டை அடுத்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளன.

அதனையடுத்து, எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு அமைய பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.

பெப்ரவரி 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டில்ஷாட் ரொஹான் திஸ்ஸ அபேகுணசேகர, கௌரவ அப்துல் பாயிஸ் கமர்தீன், கௌரவ அதாவுத செனவிரத்ன மற்றும் திஸ்ஸ ரெஜினோல்ட் பலல்லே ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை முன்வைப்பதற்கு அன்றைய தினம் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.