ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 7ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 4 பெண் வேட்பாளர்கள் அடங்குவார்கள்.
பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும்.
இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அங்குள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.