விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்த நிலையில் அதற்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே நடைபெற்ற இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவரது உடலையும் காட்டியது.
ஆனால், புலிகளின் தீவிர ஆதரவாளரான பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவே கூறி வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பிரபாகரன் பற்றிய உண்மையை கூற இருக்கிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன் என்று கூறினார்.
அவர் தக்க சமயத்தில் வெளிப்படுவார் என்றும் கூறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தவறான தகவல் வெளியிடப்படுகிறது என்றும், டி.என்.ஏ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
newstm.in