சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி வருகிறது. கூட்டணிக் கட்சிகள் எங்களோடு இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறார்கள். வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் நான் பிரசாரம் செய்யவிருக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் தினேஷ் குண்டுராவ் 15-ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25-ம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார். எங்களுடைய கூட்டணி கொள்கைரீதியிலான கூட்டணியாக இருக்கின்ற காரணத்தினால், எங்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க முறைப்படி த.மா.கா-வுக்குத்தான் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க எடுத்துக்கொண்டுவிட்டது. அந்தக் கூட்டணியின் தன்மையும் எங்கள் கூட்டணியின் தன்மையும் இதுதான். இதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.
“பிரதமர் பேசவில்லை…”
அவர் எங்களைப் பார்த்து, `தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் அடிபணிந்து நடக்கிறார்கள்’ என்கிறார். அது தவறான வாதம். வன்மையாகக் கண்டிக்கிறோம். அதானி பங்குச்சந்தையில் ஆற்றிய ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் பெரிய போராட்டத்தை நடத்தியது. இது குறித்து பிரதமர் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. நிதியமைச்சர், `பங்குச்சந்தை அதுவே தன்னை சரி பார்த்துக்கொள்ளும்’ என்று சொல்கிறார். செபி அதை கண்காணிக்கிறது என்று சொல்கிறார். ஒரு நிறுவனத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி வீழ்ந்திருக்கிறது.
எனவே, அதன் பின்னால் இருப்பதை மத்திய அரசும், பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும். இந்திய ரயில்வேயில் 2030-க்குள் முடிவு பெறக்கூடிய திட்டங்கள் 39 திட்டங்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு திட்டம்கூட தமிழகத்துக்குக் கிடையாது. 2030 வரை தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு வாய்ப்பில்லை என்றால், தமிழகத்தில் தொழில் துறை எவ்வாறு வளர்ச்சியடையும். இதற்கு பா.ஜ.க பதில் சொல்ல வேண்டும். அந்தியோதையா ரயில் திட்டம் என்பது எளிய மக்களுக்கானது. தமிழகத்தில் இது சிறப்பாகச் செயல்படவில்லை.
“தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது…”
உதாரணத்துக்கு தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு ரயில் செல்கிறது. அதில் 20 பெட்டிகள்தான் இருக்கின்றன. மக்கள் தொற்றிக்கொண்டு பயணம் செய்கிறார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் 2 முன்பதிவில்லாத பெட்டிகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். தெற்கு ரயில்வே இதில் கவனம் செலுத்த மறுக்கிறது. தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது.
புதிய வழித்தடம், கோச் இல்லை. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மா.சுப்பிரமணியன், ‘2028-ல் தான் அந்தத் திட்டம் நிறைவு பெறக்கூடும்’ என்கிறார். 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 220 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தோம். இதோடு அடிக்கல் நாட்டப்பட்ட பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் என்று செயல்பாட்டில் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் இல்லையே ஏன்… இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க ஏன் போராடக்கூடாது.
“ஆளுநர் உரிமைகளைத் தாண்டி பேசுகிறார்…”
ஆளுநர்கூட தமிழகத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிற உரிமைகளைத் தாண்டி பேசுகிறார். பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரோ அல்லது அகில இந்திய தலைவரோ பேசுவதைவிட மிக அதிகமாக அரசியல் பேசுகிறார். அவர் எய்ம்ஸ்ஸை கொண்டுவர முயற்சி செய்தால் என்ன… நேற்று ஒரு பெரிய குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அதில், ‘தமிழகத்தில் தீண்டாமை கொடுமை அதிகமாக இருக்கிறது. தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். 7% குற்றவாளிகளுக்குத்தான் தண்டனை கிடைக்கிறது. அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 30% செலவு செய்யப்படாமல் இருக்கிறது’ என்று சொல்கிறார்.
தீண்டாமை இந்தியா முழுவதும் இருக்கிறது. முதன் முறையாக மதுரையில் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாத ஐயர் தீண்டத்தகாதவர்களை அழைத்துக்கொண்டு கோயில் பிரவேசம் செய்தார். 70 ஆண்டுகளுக்கு முன்பு அது கற்பனை செய்யக்கூடிய விஷயமா. பிறகு பெரியார், காமராஜர் எவ்வளவு செய்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்பதற்காக 24 பேர் கொல்லப்பட்டனர். பா.ஜ.க ஆட்சியில்தான் நடந்தது. இதற்கு பிரதமர், அந்த மாநில முதல்வர் பதில் சொன்னார்களா… நீங்கள் இப்படி அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், சமூகநீதி கொடி கட்டி பறக்கும் தமிழகத்தை குறை சொல்வது என்ன பொருள்?
“ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கின்றேன்…”
எனவே பா.ஜ.க தமிழகத்தில் திட்டமிட்டு ஆட்சி முறைக்கு எதிராக, பண்பாட்டுக்கு எதிராக, கலாசாரத்துக்கு எதிராக, வளர்ச்சிக்கு எதிராக அவர்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஊடகங்கள் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து பா.ஜ.க கவலைப்பட்டிருக்கிறதா… ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மிகப்பெரிய சதி செய்கிறார்கள். அரசியல் கருத்துகளை மோடி, நட்டா, அண்ணாமலை சொல்லட்டும்.
நாங்கள் பதில் சொல்கிறோம். ஆளுநர் எப்படி சொல்லலாம். நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தீண்டாமையை நீங்கள்தான் நியாயப்படுத்துகிறீர்கள். இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா… இந்து மதத்தின் தலைவராக ஒரு தீண்டத்தகாதவரை நியமிக்க முடியுமா… நீங்கள்தான் இருப்பதிலேயே மோசமானவர்கள். காவல்துறையில் தீண்டாமைக்கு எதிரானவர்களும், ஆதரவானவர்களும் இருப்பார்கள்.
“எதற்காக அஞ்சுகிறீர்கள்?”
ஆனால் அரசு தீண்டாமைக்கு எதிராக இருக்கிறது. கலைஞர் தலித் பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொண்டார். அதை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்களா… முஸ்லிம்கள் மத்தியில் பிரதமர் பேசுகிறார். ஆனால் குஜராத் கலவரம் குறித்துப் பேச முடியுமா… பிபிசி ஆவணப்படத்தை வெளியிட்டதே, அதற்கு என்ன பதில் சொன்னார்கள்… அதை ஏன் தடைசெய்கிறீர்கள்… காஸ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு வரி விலக்கு கொடுத்தீர்கள். அதை திரையிட சொன்னீர்கள். அரசு ஆதரவாக இருந்தது. அந்தப் பேராண்மை, துணிவு, உங்களுக்கு பிபிசி ஆவணப்படத்துக்கும் வந்திருக்க வேண்டும்.
எதற்காக அதைப் பார்த்து அஞ்சுகிறீர்கள். நாடகம் ஆடுவது வேறு. லட்சியமாக ஏற்றுக்கொள்வது வேறு. பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொன்னால் மகிழ்ச்சிதான். வந்தார் என்றால், நானும் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். அனைத்து தலைவர்களுக்கும் குறிப்பிட்ட நாள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது பற்றி அ.தி.மு.க பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல் இருக்கிறது. எந்த விதிமுறையையும் காங்கிரஸ் மீறவில்லை” என்றார்.