"புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூருவின் வானம் சாட்சியாகி வருகிறது"- பிரதமர் மோடி

2024-25 க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு-சர்வதேச விமான கண்காட்சியை தொடக்கி வைத்து பிரதமர் பேச்சு
பெங்களூருவில் ஐந்து நாட்கள் நடைபெறும் “ஏரோ இந்தியா 2023” நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், ஏற்றுமதியை மேலும் உயர்த்தும் வகையிலும், இந்திய தயாரிப்புகளை உலக நாடுகளுக்கு பிரதிபலிக்கும் விதமாகவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தன.
உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளில் விமானங்கள் நடத்திய சாகச நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர். பின்பு பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி கூறுகையில், “புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூருவின் வானம் சாட்சியாகி வருகிறது. இன்று நாடு புதிய உயரங்களைத் தொட்டு, அவற்றையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
image
ஏரோ இந்தியாவின் 2023 நிகழ்ச்சி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த ஆண்டு ஏரோ இந்தியா கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது புதிய இந்தியாவில் உலக நாடுகளின் நம்பிக்கையை குறிக்கிறது. இந்த ஆண்டு நிகழ்வு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. சிறு குறு நிறுவனங்கள், இந்திய ஸ்டார்ட்அப்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நிறுவப்பட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து மட்டங்களிலிருந்தும் பங்கேற்றுள்ளனர்.
இதன் மூலம் ஏரோ இந்தியாவின் கருப்பொருளான “பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” உணரப்படுகிறது. இந்த நிகழ்வு மற்றொரு காரணத்திற்காக மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது, தொழில்நுட்ப உலகில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற கர்நாடகா போன்ற மாநிலத்தில் இது நடக்கிறது. இந்த நிகழ்வு விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். கர்நாடக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். ஒரு நாடு, புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையுடன் முன்னேறும் போது, அதன் அமைப்புகளும் புதிய சிந்தனையுடன் மாற்றியமையத் தொடங்குகின்றன. இன்றைய நிகழ்வு இந்தியாவின் புதிய சிந்தனையையும் பிரதிபலிக்கிறது.
image
இன்று இந்த நிகழ்வு வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. இது இந்தியாவின் பலம். இந்தியா ஒரு சாத்தியமான பாதுகாப்பு பங்காளியாகவும், வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியாகவும் உள்ளது. பாதுகாப்புத் தேவைகளுக்கு நம்பகமான உறுதுணையை தேடும் நாடுகளுக்கான விடையாக, இந்தியா உருவாகி வருகிறது. 2024-25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்காக உள்ளது.
இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய பாதுகாப்புத் தளமாக மாறும். 21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்புகளையும் இழக்காது. நாம் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம். சீர்திருத்த பாதையில், ஒவ்வொரு துறையிலும் புரட்சியை கொண்டு வருகிறோம். பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த நாடு, இப்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.