புதுச்சேரி: நாட்டிலேயே முன்னோடி திட்டமாக, புதுச்சேரி கடல் தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய ‘கடல்சார் திட்டமிடல்’ சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடல் சார்ந்த திட்டமிடல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், இதில் கூட்டாக பணியாற்றவும் இந்தியா – நார்வே இடையே, கடந்த 2019ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கடல் போக்குவரத்து, எரிசக்தி, மீன் வளம், கடல்வாழ் உயிரினங்கள், சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்றவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கடலோர பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், கடல் வளங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில், இரு நாட்டு விஞ்ஞானிகளும் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்வர்.
ஆய்வில் திரட்டப்படும் தகவல்களை தொகுத்து, மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடலோர ஆய்வு மையமானது, ‘கடல்சார் திட்டமிடல்’ சாப்ட்வேரை தயாரிக்கும்.
இந்த திட்டத்திற்கான முன்னோடி மையங்களாக புதுச்சேரியும், லட்சத் தீவும் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடல் சார்ந்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆராய்ச்சியில் திரட்டப்பட்ட தகவல்கள் ‘கடல்சார் திட்டமிடல்’ என்ற சாப்ட்வேராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேரில் புதுச்சேரியின் வடக்கு எல்லையான கனகசெட்டிக்குளத்தில் ஆரம்பித்து, தெற்கு எல்லையான மணப்பட்டு வரையிலான கடல் பகுதியில் கடல் நீரின் தரம், நீரோட்டம், சீதோஷ்ணநிலை, கடல் நீரில் கலந்துள்ள மாசுக்கள், சுற்றுச்சூழல் தொடர்பான விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும், மீன் வளம் குறித்த தகவல்கள், அதாவது, மீன்கள் எங்கே அதிகமாக கிடைக்கும், ஆமைகள் உள்ளிட்ட மற்ற கடல்வாழ் உயிரினங்கள் விபரம், அவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதிகள், பவளப்பாறைகள் குறித்த அனைத்து விபரங்களும் திரட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை மட்டுமல்லாமல், சுற்றுலாவுக்கு ஏற்ற கடற்கரை சுற்றுலா மையங்கள் குறித்த விபரங்களும் திரட்டப்பட்டுள்ளன. மேலும், ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் கவச உடை அணிந்து ஆழ்கடலுக்கு சென்று பார்ப்பதற்கு ஏற்ற இடம் எது, கடலுக்குள் சென்று பார்க்கும்போது கடல் நீர் கண்ணாடிபோல சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கும் இடங்கள் குறித்த விபரங்களும் தொகுக்கப்பட்டு சாப்ட்வேரில் இடம் பெற்றுள்ளது.
கடலில் செல்லும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும்பட்சத்தில், எந்த இடத்தில் எண்ணெய் கசிந்துள்ளது, எவ்வளவு கடல் மைல் துாரத்துக்கு பரவி உள்ளது போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக, எண்ணெய் படலத்தை உடனடியாக அகற்றி கடல் மாசுபடுவதையும், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும்.
இதுபோன்ற முழுமையான விபரங்கள் அடங்கிய ‘கடல்சார் திட்டமிடல்’ சாப்ட்வேர், நாட்டிலேயே முதன்முறையாக தயாரிக்கப்பட்டு, புதுச்சேரியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது.
ஓட்டல் அதிதியில் இன்று மாலை நடக்கும் விழாவில் டிஜிட்டல் கடல்சார் திட்டமிடல் சாப்ட்வேரை, கவர்னர் தமிழிசை வெளியிடுகிறார். புதுச்சேரி கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அடங்கிய மேப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிடுகிறார்.
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், நார்வே நாட்டின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த சாப்ட்வேர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, அரசின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்