பூட்டப்பட்ட ஆளுநர் மாளிகை வளாகப் பள்ளிவாசல்; ஜவாஹிருல்லா கோரிக்கையும், அதிகாரிகள் விளக்கமும்!

சமீபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல் வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்ற அந்தப் பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது.

த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா

ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும் அந்தப் பள்ளிவாசலில் மிகவும் அமைதியாக நடந்துவந்தன. இந்தப் பள்ளிவாசலாலோ, பள்ளிவாசலுக்கு வருபவர்களாலோ எந்தவிதத் தொந்தரவும் பிரச்னையும் இதுவரை ஏற்பட்டதில்லை. தொழுகைக்கு வருபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் வாகன விவரங்களை நுழைவாயிலில் காவல் அதிகாரிகளிடம் பதிவுசெய்துவிட்டே தொழுது வந்தனர்.

கொரோனா காலகட்டத்தில் பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு, இயல்புநிலைத் திரும்பிவிட்ட பிறகும், ஆளுநர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டப்பட்டு தொழுகைக்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது. இதில் உள்நோக்கம் இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இது குறித்து ஆளுநர் உரிய கவனமெடுத்து, பல ஆண்டுகளாக அமைதியாகத் தொழுகை நடந்துவந்த பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவண செய்ய வேண்டுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநர் மாளிகை

இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகையிலுள்ள அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “கொரோனா காலகட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடியதைப் போலவேதான் இங்கிருந்த பள்ளிவாசலும் மூடப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தற்போது பள்ளிவாசலை மீண்டும் திறக்கவேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.