பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக வீராங்கனைகள் இன்று ஏலம்

மும்பை,

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டு உள்ளன. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளனர்.

இதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். முதலில் 409 பேர் இருந்தனர். நேற்று கூடுதலாக 39 வீராங்கனைகள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள். இந்தியாவின் லத்திகா குமாரி (வயது 41) அதிக வயது வீராங்கனையாகவும், ஷப்னம் எம்.டி., சோனம் யாதவ், வினி சுசான் (தலா வயது 15) ஆகியோர் குறைந்த வயது வீராங்கனைகளாகவும் அறியப்படுகிறார்கள்.

யார்-யாருக்கு வாய்ப்பு?

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், சினே ராணா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னெர், எலிஸ் பெர்ரி, மெக் லானிங், அலிசா ஹீலே, இங்கிலாந்தின் சோபி எக்லெக்ஸ்டன், நாட் சிவெர், நியூசிலாந்தின் சோபி டேவின், வெஸ்ட் இண்டீசின் டியாந்திரா டோட்டின் உள்பட 24 வீராங்கனைகளின் அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ.50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது ரூ.50 லட்சத்தில் இருந்து இவர்களது ஏலத்தொகை ஆரம்பிக்கும்.

தென்ஆப்பிரிக்காவின் மரிஜானே காப், ஷப்னிம் இஸ்மாயில், மிக்னோன் டு பிரீஸ், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, தாலியா மெக்ராத், இங்கிலாந்தின் ஹீதர் நைட், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலியா கெர், இந்தியாவின் ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, ராதா யாதவ் உள்ளிட்டோரின் தொடக்க விலை ரூ.40 லட்சமாகும்.

இதில் மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஷபாலி, தீப்தி ஷர்மா ஆகியோர் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்லெக்ஸ்டன், ஹீதர் நைட், எலிஸ் பெர்ரி, அலிசா ஹீலே உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளின் மதிப்பும் கணிசமாக எகிற வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் வீராங்கனைகள் ஏலம் நிகழ்ச்சியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.