புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளியொன்றில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியொன்றில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ். வேதியியல் ஆசிரியரான இவர், கடந்த மாதம் 7-ம் தேதி மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை அவர்களின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் தெரியாமல் கொடைக்கானலுக்கு தனது காரில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து அதில் ஒரு அறையில் அவரும், மற்றொரு அறையில் மாணவ மாணவிகளையும் தங்க வைத்துள்ளார். பின் தான் அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவிக்கு ஆசிரியர் ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்த ரமேஷ், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை அழித்துவிட வேண்டும் என்றும் மாணவ மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஒரு மாணவியுடன் ஆசிரியர் ரமேஷ் தனிமையில் இருந்ததாகவும், அதை சிலர் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் இந்த பிரச்னை சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததன் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் மூலம் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுல பிரியா மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் குற்ற சம்பவங்கள் உறுதியானதையடுத்து இதுகுறித்து அருகிலிருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் ரமேஷின்மீது வழக்குப் பதியப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் ரமேஷ் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர் ஒருவரே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM