இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம், இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை & தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு டாக்டர்.எல்.முருகன், இந்திய உயர் ஸ்தானிதர் கோபால் பாக்லே, மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களின் அதி உயர் பிரசன்னத்துடன் 2023 பெப்ரவரி 11 ஆம் திகதி நடைபெற்ற வண்ணமயமான நிகழ்வுகளுடன் மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.
2. யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பரிசென இங்கு வர்ணித்திருந்த அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்நிலையத்தை நிர்மாணித்து வழங்கியமைக்காக அவருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றியினையும் தெரிவித்திருந்தார். அத்துடன் பொருளாதார சவால்களை எதிர்கொண்ட காலத்தில் வழங்கிய உதவிகளுக்காகவும் அவர் இந்தியாவுக்கு நன்றியினைத் தெரிவித்திருந்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒற்றுமையினைச் சுட்டிக்காட்டியதுடன் இந்தியாவும் இலங்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
3. இதேவேளை, இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்கள், இலங்கையுடனான இந்திய ஒத்துழைப்பானது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மூலம் வழிநடத்தப்படுவதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கான விசேட நிதி உதவி திட்டமொன்றும் இணை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. வடமாகாணத்தில் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் மக்களை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி திட்டங்கள் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
4. அத்துடன், யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தை நிர்மாணித்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அதி மேதகு ரணில் விக்ரமசிங்க மற்றும் கௌரவ விதுர விக்ரம நாயக்க ஆகியோர் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கிச் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் இடம்பெற்ற பல்வேறு கலாசார நிகழ்வுகள் இலங்கை கலாசாரத்தின் செழுமை மற்றும் பன்முகத்தன்மையை பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த அதிநவீன கலாசார நிலையமானது இரண்டு தளங்களில் நூதன சாலை, 600க்கும் அதிகமானோர் அமரக்கூடிய வசதியைக்கொண்ட நவீன கேட்போர் கூடம், 11 மாடிகளைக் கொண்ட கற்றல் நிலையம், திறந்த வெளி அரங்காக பயன்படுத்தக்கூடிய சதுக்கம், குளிரூட்டப்பட்ட கண்காட்சி நிலையம், திறந்த கண்காட்சி மையம், நூறு இருக்கைகளைக் கொண்ட மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
6. இந்திய பிரதமர் ஒருவரால் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது விஜயமான, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015 மேயில் மேற்கொண்ட விஜயத்தின்போது யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் நிர்மாண பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில், 2022 மார்ச் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் அவர்கள் மெய்நிகர் மார்க்கம் மூலமாக இந்நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
7. வட மாகாணத்திலுள்ள மக்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவருக்குமான இந்திய அரசின் அர்ப்பணிப்பின் தலைசிறந்த உதாரணமே யாழ்ப்பாண கலாசார நிலையமாகும். இந்திய அரசாங்கம், இலங்கையுடன் மேற்கொள்ளும் அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையானது, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, வாழ்வாதார அபிவிருத்தி போன்ற நாளாந்த வாழ்வின் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதாக காணப்படும் அதே வேளை இந்த ஒத்துழைப்பானது 5 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
கொழும்பு
11 பெப்ரவரி 2023