ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா-பெங்கால் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

பெங்களூரு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா- கர்நாடகா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே கர்நாடகா 407 ரன்களும், சவுராஷ்டிரா 527 ரன்களும் குவித்தன. 120 ரன்கள் பின்தங்கிய நிலையில் கர்நாடகா 2-வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 115 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய போதிலும் கேப்டன் அர்பித் வசவதா நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சவுராஷ்டிரா அணி 34.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த கேப்டன் அர்பித் வசவதா 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்தூரில் நடந்த மற்றொரு அரைஇறுதியில் பெங்கால் அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்தை பந்தாடி 15-வது முறையாக இறுதிச்சுற்றை எட்டியது. இதில் 548 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி 39.1 ஓவர்களில் 241 ரன்களுக்கு அடங்கியது. கடந்த சீசனில் அரைஇறுதியில் மத்திய பிரதேசத்திடம் தோற்ற பெங்கால் அதற்கு பழிதீர்த்துக் கொண்டது.

வருகிற 16-ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கும் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா- பெங்கால் அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சவுராஷ்டிராவுடன் இணைந்து ரஞ்சி இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.