திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி இறந்த நிலையில், விவசாயியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஏளனமாக பேசிய காவல்துறை பெண் ஆய்வாளரின் வீடியோ வெளியான நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குல்லலகுண்டு ஊராட்சி கன்னிமார்நகரைச் சேர்ந்தவர் 50 வயதான விவசாயி பாண்டி. இவரது மகன் சதீஷ்கண்ணன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தோட்டத்திற்குச் சென்ற போது சிலர் பாண்டியின் தோட்டத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டி மனுதாக்கல் செய்தார். இதில், பாண்டி புகார் மீது விசாரணை செய்ய நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு மீண்டும் காவல்நிலையம் சென்ற பாண்டி அங்கேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 9ம் தேதி பாண்டி உயிரிழந்த நிலையில், காவல்நிலையத்தில் அவருக்கு எந்தவிதமான முதலுதவியும் அளிக்காததோடு அவரை போலீசார் ஏளனம் செய்து அவமதிப்பு செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அரை மயக்கத்தில் பாண்டி இருக்கும் போது அவரது அருகிலேயே பெண் ஆய்வாளர் சண்முகலட்சுமி செல்போனில் யாருக்கோ லைவ் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக மற்ற போலீசாரும் இது பிளான் தான், ஒரு சொட்டு மட்டும் வாயில் ஊற்றியிருப்பான், மீதியை மேலே ஊற்றிக் கொண்டான் என்று கூறிக்கொண்டே பாண்டியை வீடியோ எடுப்பதில் குறியாக இருந்தனர்.
ஒருகட்டத்தில் பாண்டி மயங்கி விழுவும், கிடக்கட்டும் கிடக்கட்டும் அதனால் ஒன்றும் இல்லை என்று அசால்டாக பேசுகிறார் இன்ஸ்பெக்டர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தார்.
இதற்கிடையே, பாண்டி விஷம் குடித்த பிறகே, அவரது புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்றதாக, பாண்டி மீதும் வழக்கு பதிவு செய்ததும் தெரிய வந்துள்ளது.
கடும் பணிச்சூழலுக்கு இடையே பணியாற்றினாலும் மனிதநேயம் அனைவருக்கும் தேவையானது என்பதை காவல்துறையினரும் உணர வேண்டியது அவசியம்.