வெடித்த எடப்பாடி ட்வீட்… சட்டம் ஒழுங்கு போச்சு… திமுக ஆட்சிக்கு இதுதான் சாட்சி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தினசரி பிரச்சாரம், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சியினருடன் ஆலோசனை, தேர்தல் வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள் என பரபரப்பான நிலை காணப்படுகிறது. இவையே தலைப்பு செய்திகளாக மாறி வருகின்றன. இதற்கிடையில் ஏடிஎம் கொள்ளை, வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் கொலை என அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி ட்வீட்

இதில் திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய நகரங்களின் பெயர்கள் அடிபட்டுள்ளன. இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், நடப்பு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ட்வீட் ஒன்று போட்டுள்ளார். அதில், கோவையில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை, அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை,

ஏடிஎம் கொள்ளை

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களை பார்க்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன் நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மக்கள் பாதுகாப்பு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி. இந்த விடியா அரசின் முதல்வர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதில் திருவண்ணாமலை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத 4 ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு சவால்

கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரம், சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் தீவைத்து கொளுத்தி விட்டனர். இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவாலான சூழல் ஏற்பட்டுள்ளது.

ரவுடிகள் தாக்குதல்

இந்த குற்றச் செயலில் வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பிரிவினர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக ஏடிஎம் தொழில்நுட்பம் குறித்து தெரிந்தவர்கள் தான், அதன் அலாரத்தை அடிக்க விடாமல் தடுத்து கொள்ளை செயலை அரங்கேற்றி உள்ளனர். மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ஏடிஎம் சிசிடிவி காட்சிகளை போலீசார் பெற்றுள்ளனர்.

அதைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் இன்று காலை வாய்தா வாங்க வந்த இரண்டு ரவுடிகள் மீது 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கோகுல் என்ற நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.