இந்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறக் கூடிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில், கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் அசோக் கெலாட், தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்தார். இதனை எதிர்க்கட்சியான பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் அசோக் கெலாட், 34 வினாடிகள் தான் பழைய பட்ஜெட்டை வாசித்ததாகவும், மோடி இதை அரசியலாக்க முயற்சிப்பதாகவும், தன்னுடைய பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
தனியார் ஊடகமான என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியொன்றில் இது குறித்து பேசிய அசோக் கெலாட், “நான், பழைய பட்ஜெட்டை 34 வினாடிகள் தான் படித்தேன். ஆனால், நான் என்னமோ பழைய பட்ஜெட்டையே முழுவதுமாக படித்ததாக பா.ஜ.க கூறுகிறது. பிரதமர் மோடி இதனை ஒரு அரசியல் பிரச்னையாக மாற்ற முயற்சிக்கிறார்.
எங்கள் பட்ஜெட் சிறப்பாக இருக்கும் என்று பா.ஜ.க-வினருக்குத் தெரியும். அதனால் தான், பட்ஜெட்டுக்குப் பிறகு அவர்கள் பீதியடைந்தனர். இதன் காரணமாகத்தான், என்னுடைய பேச்சை அவர்கள் பிரச்னையாக்க முயற்சிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் மாநில சுற்றுப்பயணம் குறித்து பேசிய அசோக் கெலாட், “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டெல்லியிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுவருவது பிரதமருக்கு வழக்கமாகிவிட்டது.
குஜராத்தில் அப்படித்தான் செய்தார். நேற்று ராஜஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணமாக வந்து அரசியல் பேரணி நடத்தினார். பொது நிகழ்ச்சியைக் காரணம் காட்டி, பிரசாரம் செய்கிறார். இது சரியல்ல. ராஜஸ்தானில் மோடியை எதிர்த்துப் போராட நான் தயாராக இருக்கிறேன். இந்த முறை, பா.ஜ.க-வின் ஆட்டம் வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன். அவர்களின் ஆட்டத்தை மக்கள் புரிந்துகொண்டு மீண்டும் எனக்கு வாய்ப்பு தருவார்கள்” என்று கூறினார்.