பெட்ரோல் பங்கில் அவ்வப்போது மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. தற்போது நீதிபதியிடமே இது போன்ற மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தன் காருக்கு பெட்ரோல் நிரப்பியிருக்கிறார். அப்போது டேங்க் புல் செய்யுமாறு தெரிவித்திருக்கிறார். ஊழியரும் பெட்ரோல் டேங்கை புல் செய்துவிட்டதாக பெட்ரோல் பில்லை கொடுத்திருக்கிறார். நீதிபதி, பில்லைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அந்த பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி `என்னுடைய காரின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 50 லிட்டர் தான். ஆனால் அதில் எப்படி 57 லிட்டர் நிரப்ப முடியும்’ என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதோடு, இது குறித்து மாவட்ட ஆட்சியரை அழைத்து புகாரளித்திருக்கிறார். உடனே இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்த ஆட்சியர், விசாரணையில், அந்த பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் பலர் இவ்வாறாக ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அந்த பெட்ரோல் பங்க் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.