Aero India 2023: பிரதமர் மோடி பெருமிதம்! தேசம் உயர்ந்து செல்கிறது!

கர்நாடகா மாநிலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. பெங்களூரில் உள்ள யெலஹங்கா விமானப்படை தளத்தில் 14ஆவது ஏரோ இந்தியா 2023 நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா 2023 க‌ண்காட்சியின் கருப்பொருள் “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” என்பதாகும்.

இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: “புதிய உயரங்களே புதிய இந்தியாவின் முகம் என்பதற்கு பெங்களூருவின் இன்றைய வான்வெளி சாட்சியாகிக் கொண்டிருக்கிறது. தேசம் புதிய உயரங்களைத் தொட்டு அதனைக் கடந்தும் உயர்ந்து செல்கிறது.” என்றார்.

இந்தியாவின் திறமைக்கு ஏரோ இந்தியா 2023 கண்காட்சி ஓர் உதாரணம் என தெரிவித்த பிரதமர் மோடி, “கடந்த சில ஆண்டுகளாக இது வெறும் விமான கண்காட்சியாக மட்டுமே இருந்தது. இன்று இது வெறும் கண்காட்சி மட்டும் இல்லை. இது இந்தியாவின் பலம். இது இந்தியாவின் பாதுகாப்புத்துறை மற்றும் தன்னம்பிக்கையின் நோக்கங்களில் கவனம் செலுத்துகிறது.” என்றார்.

மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் சர்வதேச விமானகண்காட்சியை நடத்தி வருகிறது. அந்தவகையில், 14ஆவது ஏரோ இந்தியா 2023 இன்று தொடங்கியுள்ளது.

‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஏரோ இந்தியா 2023-யில் தனிக்கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, இலகுரக போர் விமானம் (எல்சிஏ)-தேஜாஸ், எச்டிடி-40, டோர்னியர் லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர் (எல்யுஎச்), லைட் காம்பாட் ஹெலிகாப்டர் (எல்சிஎச்) மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) போன்ற உள்நாட்டு விமான தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

ஏரோ இந்தியா 2023இல் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன. சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் இயந்திர உற்பத்தித் துறையின் 65 தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.