அதானி விவகாரம் | நிபுணர் குழு அமைத்தால் ஏற்க தயார் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய அளவிற்கு சரிவினை சந்தித்துள்ளது. அந்த அறிக்கையின் உண்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வெள்ளியன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக திங்கள் கிழமைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கையில், ‘‘எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தால் அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.ஹிண்டன்பர்க் – அதானி விவகாரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, உச்சநீதிமன்றம் குழு தொடர்பாக முன்மொழியப் பட்ட விதிமுறைகள் குறித்த அறிக்கையை புதன்கிழமைக்குள் மத்தியஅரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அடுத்தகட்ட விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

120 பில்லியன் டாலர்கள் இழப்பு: ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி நிறுவனங்களின் பங்குகள் ஒரு சில நாட்களில் 120 பில்லியன் டாலர்களை இழந்தது. இதனால், ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். இந்த விவ காரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அதற்கான பரிந்துரையை வழங்கியது.

இதனிடையே, செபி வாரியம் வரும் 15-ம் தேதி நிதியமைச்சக அதிகாரிகளை சந்தித்து ஹிண்டன் பர்க் – அதானி விவகாரம் தொடர் பாக தற்போதைய விசாரணை நிலவரத்தை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.