அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு சலுகைகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்துள்ளது
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், விவாதிக்க அனுமதி மறுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அந்த வகையில், அதானி பற்றி 5 கேள்விகள் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை என அக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக, மீண்டும் 5 கேள்விகளை கேட்டு பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் (பொறுப்பு கோவா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், “அதானி குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் கௌதம் அதானியுடன் இணைந்து பிரதமர் மேற்கொண்ட மொத்த வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை எவ்வளவு? கடந்த 8 ஆண்டுகளாக திரு. அதானியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு பிறகு பிரதமருடன் சந்தித்தது எத்தனை முறை?
பிரதமர் வெளி நாட்டுக்கு சென்ற உடனேயே அவரைத் தொடர்ந்து அதே நாட்டிற்கு திரு. அதானி மேற்கொண்ட பயணங்களின் விவரங்கள் என்ன? பிரதமர் மோடி சென்று வந்த பிறகு அதானி குழுமங்கள் ஒப்பந்தங்களைப் பெற்ற நாடுகளைப் பற்றிய விவரங்கள் என்ன? அதானி மற்றும் அவரது குழுக்கள் கடந்த இரண்டு பொதுத் தேர்தலுக்கு பாஜகவுக்கு நன்கொடையாக அளித்த நிதி எவ்வளவு?” ஆகிய கேள்விகளை எழுப்பி பிரதமர் மோடிக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.