மும்பை : 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 6.52% ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை திங்கள் அன்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 3வது மாதமாக சில்லறை பணவீக்கம் உயர்வை சந்தித்து 6.52% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.72%ஆக இருந்த நிலையில், ஒரே மாதத்தில் 0.80% அளவிற்கு சில்லறை வர்த்தகம் உயர்வினை கண்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.01%ஆக இருந்தது.
அது தற்போது ஒரே ஆண்டில் 6.52% ஆக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வே ஜனவரி மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கத்தை 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்த்தி இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. உணவு விலை பணவீக்கமும் ஜனவரி மாதத்தில் 5.94% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வு உட்பட பல்வேறு முயற்சிகளை ரிசர்வ் வங்கி முன்னெடுத்த நிலையிலும் பணவீக்கம் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கியின் தொடர் தோல்வியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 3வது மாதமாக சில்லறை பணவீக்கம் அதிகரித்து இருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி மீண்டும் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்கம், வீடுகள், உணவு, ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், போக்குவரத்து, மருத்துவம், மின்னணுவியல், கல்வி உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளும் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கணக்கிடப்படுகிறது.