கோவை மாநகராட்சி எல்லைக்குள் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 721 ரூபாய் சம்பளம் வழங்கிட வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
அதாவது, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 648 ரூபாய் என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் கோவை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 421 ரூபாய் என்ற விதத்தில் 12,865 ரூபாய் என மொத்த சம்பளம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
சம்பளம் என்னாச்சு?
இது தூய்மை பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாநகராட்சி மன்றத்தில் 648 ரூபாய் என அறிவித்துவிட்டு 421 ரூபாய் மட்டும் சம்பளம் வழங்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள், மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேயரை முற்றுகையிட்டனர்
இவர்கள் இருவரையும் தூய்மை பணியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். மாமன்றத்தில் அறிவித்த சம்பளம் ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினர். உடனே முற்றுகை போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சம்பளம் கைக்கு வர வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
என்ன காரணம்
அப்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசுகையில், இ.எஸ்.ஐ, பி.எஃப் பணம் பிடித்தது போக எஞ்சிய பணம் தான் தற்போது சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்தார். ஆனால் தூய்மை பணியாளர்கள் தீர்மானத்தில் அறிவித்த சம்பளம் கைக்கு வரவேண்டும் என விடாப்பிடியாக வலியுறுத்தினர்.
வேலைநிறுத்தப் போராட்டம்
பின்னர் தூய்மை பணியாளர்கள் கூறும் போது, மாமன்றத்தில் அறிவித்த 648 ரூபாய் சம்பளம் தராமல் குறைத்து தந்துள்ளனர். தற்போது 415 ரூபாய் தான் கைக்கு வருகிறது. தூய்மை பணியாளர்களை இரண்டு நேரம் வேலை வாங்கி கொள்கின்றனர். ஆனால் பேசிய சம்பளம் தருவதில்லை. தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கில் மாநகராட்சி செயல்படுகிறது.
எங்களின் உழைப்பை மாநகராட்சி சுரண்டுகிறது. அடுத்தகட்டமாக எங்களின் கூட்டமைப்பில் பேசி உரிய முடிவெடுத்து மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். இதனால் கோவை மாநகராட்சி வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.