சீர்காழி: நூதன முறையில் பொருள்கள் வாங்கி ஆன்லைன் மோசடி; மர்ம நபரை தேடும் போலீஸார்!

சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் இக்பால். இவர் அதே பகுதியில் பெரம்பு நாற்காலி, கோரை பாய் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இக்பால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தனக்கான கணக்கை தொடங்கியிருக்கிறார். அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பலப் பொருள்களை தவணை முறையில் வாங்கியிருக்கிறார்.

ஆன்லைன் மோசடி

பொருள்களை வாங்கி இவர் சரியாக பணம் கட்டியதால், இவருக்கு அந்த ஆன்லைன் வர்த்தக் நிறுவனம் ரூ.40,000 வரை கடன் அளவு கொடுத்திருக்கிறது. கடன் அளவு கொடுத்ததிலிருந்து கடந்த ஒரு வருடங்களாக இக்பால் எந்தவித பொருள்களையும் அந்த வர்த்தக நிறுவனத்தின் மூலம் வாங்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி அந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திலிருந்து இக்பால் தொலைபேசிக்கு ஓ.டி.பி வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இக்பாலின் மொபைலில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் செயலி இயங்கவில்லை. இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார். அதற்கு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி 24 மணி நேரத்தில் செயலி இயங்கும் என தெரிவித்திருக்கிறார்.

இக்பால்

அதனைத் தொடர்ந்து, இக்பால் 24 மணி நேரம் கழித்து அந்த செயலியை திறந்து பார்த்திருக்கிறார். அப்போது பெங்களூரைச் சேர்ந்த ராஜு என்பவர் பெயரில் ரூ.33,700 க்கு டிவி, ஒன் பிளஸ் ஹெட்செட் 1 ஆகியவற்றை வாங்கியிருப்பது தெரியவந்தது. இதனைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து தான் ஏமாந்தது குறித்து இணையதளத்தின் மூலம் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார். புகார் நகலை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு எடுத்துச் சென்று கொடுத்திருக்கிறார்.

புகாரில் பெங்களூரைச் சேர்ந்த ராஜி என்பவர் தன்னுடைய மொபைலை ஹேக் செய்து போலியான மின்னஞ்சல், தொலைபேசி எண்ணை கொடுத்து ரூ.33,700-க்கு பொருள்களை வாங்கி மோசடி செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திலும் இக்பால் புகாரை தொலைபேசி வாயிலாக தெரிவித்திருக்கிறார். இதேபோல் மற்றவர்கள் ஏமாறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருக்கிறார். போலிஸார் இது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.