சென்னை: சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 மாணவர்களில் ஒருவர் மரணம் அடைந்தார்.
சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படித்து வருபவர் மாணவர் ஸ்டீபன் சன்னி. இவர் இன்று (பிப்.14) விடுதி அறையில் தூக்கில் தொங்கியபடி இருந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவர் ஸ்டீபன் உயிரிழந்தார். அதேவேளையில், சென்னை ஐஐடியில் படிக்கும் மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், “மரணம் அடைந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது வரை பார்த்தால், தற்கொலை போல்தான் தெரிகிறது. ஆனால், தொடர்ந்து விசாரணை நடைபெறும். மாணவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை வந்த பிறகு விசாரணை நடத்தப்படும். ஐஐடி சார்பிலும் விசாரணை நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |