“திருநள்ளாறில் அமைச்சர் துணையுடன் கனிமவளக் கொள்ளை படுஜோராக நடக்கிறது!" – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, காரைக்காலில் ராகுல் காந்தியின் `இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்’ ஒரு பகுதியாக, திருநள்ளாறு தொகுதியில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்த நடைப்பயணத்தில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.பி.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் நாராயணசாமி

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “காரைக்காலுக்கும் அதானிக்கும் பங்குச்சந்தைக்கும் தொடர்பு இருக்கிறது. காரைக்காலில் இயங்கி வரும் துறைமுகத்தின் ஒப்பந்ததாரரான ரெட்டி, 1,200 கோடி ரூபாய் கடன் பெற்று, அதைக் கட்ட காலதாமதமானதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த துணை வியாபாரி ( Sub contractor ) சக்திவேல் என்பவர் மூலம், அந்த 1,200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு, துறைமுகம் அதானிக்குச் சொந்தமானது. புதுச்சேரி அரசும் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

மேலும் திருநள்ளாறு அடுத்த நல்லம்பல் ஏரியில் தூர்வாரும் பணி என்ற பெயரில் கனிமவளக் கொள்ளை நடந்து வருகிறது. அரசு விதித்திருக்கும் விதிகளை காற்றில் பறக்கவிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் காரைக்கால் பேரளம் ரயில்வே பணி, விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மண் லாரி, லாரியாக அனுப்பப்படுகிறது.

மார்க் துறைமுகம்

மாவட்ட அமைச்சர், அவர் குடும்பத்தாருக்கு 17 சதவிகித கமிஷன் செல்கிறது. அதனால், கனிமவளக் கொள்ளை படுஜோராக நடைபெறுகிறது. எனவே, அமைச்சர் துணையுடன் நடைபெறும் இந்த கனிமவளக் கொள்ளையை புதுச்சேரி அரசு உடனடியாக விசாரணை செய்து, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில், சிபிஐ விசாரணைக்கு நாங்கள் வலியுறுத்துவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.