புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரர்களின் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் – பிரதமர் மோடி

டெல்லி,

2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.

அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த தற்கொலை தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

மேலும், 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அப்பகுதியை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்வோம். வீரர்களின் உயிர் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். வீரர்களின் தைரியம் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது’ என தெரிவித்துள்ளார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.