மஞ்சூர் : மஞ்சூர் அருகே சுமார் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் தோட்டத்தை காட்டு யானை சூறையாடி சென்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேல்குந்தா பகுதியை சேர்ந்த விவசாயி குமார். இவர் அட்டுமன்னு என்ற இடத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கேரட் பயிரிட்டிருந்தார். தற்போது கேரட் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேல்குந்தா பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை இரவு குமாரின் தோட்டத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. இரவு முழுவதும் அட்டகாசம் செய்த யானை அதிகாலையிலேயே தோட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
இதைத்தொடர்ந்து மறுநாள் இரவும் யானை மீண்டும் குமாரின் தோட்டத்திற்குள் புகுந்து சூறையாடியது. இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். குந்தா ரேஞ்சர் சீனிவாசன் மேற்பார்வையில் வனவர் சுரேஷ் மற்றும் வனத்துறையினர் குமாரின் தோட்டத்திற்கு சென்று காட்டு யானையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டனர். தொடர்ந்து யானையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரவு மீண்டும் அப்பகுதிக்கு யானை வருவதை கண்ட வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அதை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். இந்நிலையில் மேல்குந்தா பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானை நேற்று முன்தினம் இரவு பெரியார்நகர் பகுதியில் நுழைந்து அப்பகுதியில் உள்ள கேரட் தோட்டத்தையும் சூறையாடி சென்றது. இதைத்தொடர்ந்து மேல்குந்தா மற்றும் பெரியார்நகர் பகுதியில் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.