காதல் என்றதும் `ரோமியோ-ஜூலியட்’ தொடங்கி சர்ப்ரைஸ் செய்யும் காதல், பூங்கொத்து கொடுக்கும் காதல் என பெரும்பாலும் பேண்டஸி சார்ந்த விஷயங்களாகத்தான் நம் கண்முன் விரியும். ஆனால் `ஐ லவ் யூ’ கூட சொல்லிக் கொள்ளாமல் தன் துணையை இணையாகப் பார்த்து அவரின் கனவுக்கு துணை நிற்கும் ரசனைக்குரிய கியூட்டான காதல் கதைகளை நாம் கவனிக்காமல் கடந்து வந்திருப்போம். அப்படியான ஒரு கியூட் காதல் பகிர்வு இதோ…
நான் தினமும் புரசைவாக்கம் வழியாகத்தான் அலுவலகம் வருவேன். காதலர் தினம் நெருங்கிவிட்டதாலோ என்னவோ, இளம் காதல் ஜோடிகள் யாரேனும் தெரிகிறார்களா என்று கண்கள் தேடிக்கொண்டே இருந்தன. அப்போது பூக்கடை வைத்திருக்கும் ஓர் அக்காவும் அவரின் கணவரும் கவனம் ஈர்த்தனர்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவர்களை கவனிக்கத் தொடங்கினேன். மனைவி உட்கார்ந்து வியாபாரம் செய்ய, கணவன் குடை விரிப்பது, பூக்கட்டுவது, டீ வாங்கிக் கொடுப்பது என எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தார். தூரத்தில் இருந்து பார்க்கவே அவ்வளவு ரசனையாக இருந்ததால், அவர்களிடம் பேச முடிவு செய்தேன்.
அவர்களிடம் போய் “அக்கா, ஒரு முழம் மல்லி என்ன விலை?” என்றேன். கைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் பூக்களைத் தொடுத்துக் கொண்டே “30 ரூபாய்” என்றார். “டீயை குடிச்சுட்டு பூவைக் கட்டு” என அவரின் கணவர் அக்கறை காட்ட, அக்காவிடம் பேச்சு கொடுத்தேன்.
பேசும்போது அவர்களுடையது `காதல் திருமணம்’ என்று தெரிந்தது. “அக்கா… உங்க காதல் கதையைச் சொல்லுங்க” என்றதும், அவர் கணவரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, “அதெல்லாம் எதுக்கு தாயீ” என்று வெட்கப்பட்டார். “சும்மா சொல்லு நானும் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு” என்று கணவர் கேட்க, முகம் மலர பேசத் தொடங்கினார்.
“என் பேரு தேவகி.இவரு பிரபாகரன். கல்யாணமாகி 27 வருஷம் ஆகுது…எங்களுக்கு சொந்த ஊரு சென்னைதான். புரசைவாக்கத்துல என்னோட வீட்டு பக்கத்துல இவரு வியாபாரம் பண்ணிட்டு இருந்தாரு. அப்போ எனக்கும் இவரைப் பிடிச்சிருந்துச்சு. அவருக்கும் என்னைப் பிடிச்சிருந்துச்சு. லவ் பண்றோம்ன்னு சொல்லிக்கிட்டது இல்ல. ஆனா, மனசுக்கு தெரியும்ல. இவரைதான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். பார்க்கிறது, பேசுறதுனு மூணு மாசம் ஜாலியா போச்சு. ஒருநாள் நாங்க தனியா பேசுறதை எங்க வீட்ல பார்த்துட்டாங்க” என்று அக்கா சின்ன இடைவெளி விட, அவரின் கணவர் தொடர்கிறார்.
“இவங்க வீட்டுல காதல் விஷயம் தெரிஞ்சதும், இவங்கள வெளிய வரவிடாத படி வீட்டுக்குள்ள வெச்சு பூட்டிட்டாங்க. அப்புறம் என்ன பண்றதுன்னே தெரியல. இவங்க என்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா இருந்ததை பாத்து, அவங்க வீட்டிலேயே எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி, கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அப்போ இருந்து இப்போ வரை மகராசி மனசு கோணாமல் பார்த்துக்கிறேன்னு நினைக்கிறேன்.” என்று கூறும் போது அவரின் கண்களில் குறையாத காதல் தெரிந்தது.
“அப்போலாம் போன் இல்லையே, வீட்டுல அடைச்சு வெச்சிருந்தப்போ எப்படி பேசுவீங்க… லெட்டர் போடுவீங்களா?” என்ற கேள்விக்கு, “ஆமா, இந்த மூஞ்சிக்கு லெட்டர்லாம் எழுதுவாங்க” என்று செல்லமாகச் சிரித்துக்கொண்டே, “நாங்க கிஃப்ட் கொடுத்துக்கிட்டது இல்ல, லவ் யூ சொன்னது இல்ல. ஆனா, காதல்னா என்னன்ற தெளிவு இருந்துச்சு” என்றார் தேவகி அக்கா.
“ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழணும். என்ன பிரச்னை வந்தாலும் சேர்ந்து கடக்கணும். இத மட்டும் பண்ணிட்டா, 100 வருஷம் சண்டை சச்சரவு இல்லாமல் சேர்ந்து வாழ்ந்துறலாம். எங்களுக்கு ரெண்டு பசங்க. இவரு டிரைவர் வேலை பார்க்கிறாரு. நான் வேலை செஞ்சா இவருக்கு உதவியா இருக்கும்னு தான் கடை போட்டுருக்கேன். காலைல மார்க்கெட்டுக்கு போய் பூ வாங்கிட்டு வர்றது, கடைக்குக் கூட்டிட்டு வர்றது, மதியம் சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டுப் போறது, இவ்ளோ ஏன்…. பாத்ரூம் வந்தா இங்க இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுன்னு எல்லாம் இவருதான்.
நான் ஆம்பள இப்படித்தான் இருப்பேன், நீ பொம்பள இப்படித்தான் இருக்கணும்னு எந்தப் பாகுபாடும் இவரு பார்த்தது இல்ல. குடும்பத்துக்காக ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம். வீட்டு செலவுகளை நான் தான் கவனிச்சுக்கிறேன். இவரை நம்பி வந்தேன். இந்த நிமிஷம் வரை வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு” என்று சொல்லும் தேவிகா அக்காவின் கண்ணில் அவ்வளவு பெருமிதம்.
“இதுவரைக்கும், அண்ணா உங்களுக்கு புரொபோஸ் பண்ணியிருக்காரா?” என்று கேட்டதுமே, சின்ன சிரிப்புடன் இல்லை என்று உதட்டைப் பிதுக்கினார் தேவகி அக்கா. “சரி இருங்க… அதுக்கு ஏற்பாடு செஞ்சுருவோம்” என்று ஒரு பூவை எடுத்து அண்ணனிடம் நீட்ட, அவரும் அக்காவுக்கு வெட்கத்தோடு கொடுத்தார்.
“இவரு ‘ஐ லவ் யூ’-வே சொல்லல” என்று பூவை வாங்காமல் அக்கா கலாட்டா செய்ய, வேறு வழியில்லாமல் வெட்கச் சிரிப்போடு அக்காவுக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லி பூவை நீட்ட, அக்கா ஹேப்பி ஆயிட்டாங்க. “என் ஆசை நிறைவேறிடுச்சு. ஆனா, இவருக்கு ஜீன்ஸ் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்த காதலர் தினத்துக்கு வாங்கிக் கொடுத்துற வேண்டியது தான்” என்று அக்கா குறும்பாக அவரைப் பார்க்க, இருவரது கண்களிலும் அவ்வளவு காதல். அவர்களுக்கு காதலர் தின வாழ்த்துகள் சொல்லி அங்கிருந்து விடைபெற்றோம்.