வடமாநில கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது

கட்டட வேலை செய்த வடமாநில இளைஞரை திருட வந்ததாக நினைத்து கட்டிப்போட்டு அடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றம் செய்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலை, தாழம்பூர், காரணை, நேரு தெருவில் வடமாநில இளைஞர் ஷேத்ரா மோகன் பர்மன் (43) என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு கடைக்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு தான் பணி செய்யும் கட்டுமான இடத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியே இருக்கும் வீடுகளை தட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து வடமாநில இளைஞரை கட்டிப்போட்டு கொடூரமாக அடித்துள்ளனர். இதில், படுகாயமடைந்த அவரை அப்படியே விட்டு விட்டு அனைவரும் சென்று விட்டனர்.
image
இதையடுத்து அடுத்த நாள் காலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற தாழம்பூர் போலீசார், படுகாயமடைந்த நபரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நி;லையில், இந்த சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த போலீசார், தற்போது கொலை வழக்காக மாற்றியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் வடமாநில நபர் கடந்த 6 மாத காலமாக காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், சம்பவம் நடந்த அன்று சாப்பிட்டு விட்டு மீண்டும் தான் பணி செய்யும் இடத்திற்குச் செல்லும் வழியை மறந்து அக்கம் பக்கம் உள்ள வீடுகளை தட்டியுள்ளார்.
image
இதனால் பொதுமக்கள் அவரை விரட்டியதாகவும், அவர் கல்லை கொண்டு எறிந்ததால் பொதுமக்கள் திருடன் என எண்ணி உருட்டுக் கட்டையால் அடித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (32), ராஜா (28), உதய சங்கர் (37), விக்னேஷ் (29), பாலமுருகன் (33), ரமேஷ் (28), ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.