விருதுநகர் மேலரத வீதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன்-மணி தம்பதியினர். இத்தம்பதியினரின் மகன் லட்சுமணன். பிலிப்பைன்ஸ் நாட்டில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த எட்வார்டோ-அனபெல்லா தம்பதியினரின் மகள் அனலிசாவுக்கும் பாரம்பரிய இந்து முறைப்படி விருதுநகரில் நேற்று திருமணம் நடைபெற்றது. ஆடம்பரமாக இல்லாமல் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விஷயம் கேள்விப்பட்டு மணமகன் லட்சுமணனிடம் பேசினோம். புதுமாப்பிள்ளை தன் காதல் கதையைச் சொன்னார். “காலேஜ் படிச்சி முடிச்ச சமயம் எழுத்துல எனக்கு ரொம்ப ஆர்வம் இருந்துச்சு. அதனால புக் எழுதுறதுக்காக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு கடந்த 2016ம் ஆண்டு போனேன். அங்கே, ஐ.டி. கம்பெனில சாப்ட்வேர் டெவலப்ரா வேலை பார்த்தேன். நான், பயன்படுத்துற சாப்ட்வேர் சம்பந்தமான சந்தேகங்களை விளக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டியது இருந்துச்சு. அப்போ, நான் வசித்துவந்த தீவிலிருந்து அருகாமையில் உள்ள மற்றொரு தீவுக்கு மென்பொருள் சார்ந்த விளக்கத்திற்காக போயிருந்தேன். அப்போதான் அனலிசாவை முதல்முறையா சந்திச்சேன். அவங்க ஒரு வெப் டிசைனர். அதனால, சாப்ட்வேர் பயன்படுத்துவது தொடர்பான சந்தேகங்கள் குறித்து நாங்க நிறைய பேச ஆரம்பிச்சோம்.
பிலிப்பைன்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் நம்ம நாடு மாதிரி ரொம்ப ஈஸியா சந்திச்சுக்கக் கூடிய அளவுக்கு ஊர்கள் எல்லாம் அருகருகே கிடையாது. ஒருமுறை பார்த்துப் பேசினதுக்கு பிறகு அடுத்ததா கிளைண்ட்களை சந்தித்துப் பேசுறதுக்கு குறைஞ்சது ரெண்டு மாசமாவது ஆகிடும். எனவே அனலிசாவோட பேசுறதுக்கு பெரும்பாலும் ஆன்லைன் சேட்டிங் தான் பயன்பட்டது. அலுவல் ரீதியான சந்திப்பு இல்லாவிட்டாலும், அவங்கள பாக்குறதுக்காகவே காரணங்களை உருவாக்கிக்கிட்டு அனலிசாவை நேரில் போய் சந்திச்சிருக்கேன். ஆனா நான் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் அவங்க வீட்டுல அப்பா, அம்மாக்கு தெரியும்படியான நாகரிக சந்திப்பாகத்தான் அது இருக்கும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவங்க வீட்டு குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல உறவு உருவாச்சு. அனலிசாவுக்கு ஒரு தம்பி, ஒரு தங்கச்சி இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் திருமணமாகி குழந்தைகளும் இருக்கு. ஆனா இவங்க மட்டும்தான் கல்யாணத்தின் மீது விருப்பமில்லாமல் இருந்திருக்காங்க. இதற்கிடையே எங்க ரெண்டு பேருக்கும் இடையே நல்ல புரிதல் உருவாக ஆரம்பிச்சது. இந்த பழக்கம் மாசங்கள் கடந்து வருஷ கணக்குல தொடர்ந்துச்சு.
அப்போதான் வீட்டில் எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பிச்சாங்க. எனக்கு இப்போ 34 வயசு ஆகுது. பொதுவா தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில முப்பது வயசுக்கு மேல மாப்பிள்ளைக்கு பெண் தருவதற்கு கொஞ்சம் யோசிப்பாங்க. அதனால என்னோட கல்யாணம் என்னோட விருப்பம்னு எங்க அப்பா, அம்மா ஏற்கெனவே எனக்கு சுதந்திரம் கொடுத்து வெச்சிருந்தாங்க. 34வயசாகிட்டதால அவசரப்பட்டு திருமணம் முடிக்கக்கூடாதுனு மட்டும் தெளிவா இருந்தேன். ஆகையால பொருத்தமான இணை கிடைக்கிற வரைக்கும் காத்திருக்கலாம்னு தோணுச்சு. கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் அனலிசாவும் இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்த எண்ணம்தான் எங்களை இன்றைக்கு ஒன்னா சேர்த்திருக்கோ என்னவோ?.
ஒருகட்டத்தில் அனலிசா எனக்குப் பொருத்தமா இருப்பானு தோணுச்சு. அதனால அவங்களுடைய விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்கப் பேசினேன். அவங்களுக்கு முழு சம்மதம் இருந்ததால, அவங்க அப்பா, அம்மாக்கிட்ட பேசினேன். அவங்க அப்பா, அம்மாவும் ஓ.கே. சொல்லிட்டாங்க. அடுத்தது எங்க வீடு தான். வீட்டில் கல்யாணப் பேச்சு மும்முரமா இருந்த சமயத்துல அப்பாக்கிட்ட விஷயத்தை சொல்லவும் ‘உனக்கு பிடிச்சிருக்குன்னா கல்யாணம் வச்சுக்கலாம்பா’னு சொல்லிட்டாரு. ரெண்டு வீட்டுத்தரப்பிலிருந்தும் சம்மதம் வாங்கியாச்சு. இனி கல்யாணத்துக்கு ஆகவேண்டிய வேலையை பார்க்கலாம்னு இறங்கினோம். அப்பதான் கொரோனா தீவிரமா பரவுச்சு. அதனால ஊரடங்கு உத்தரவு போட்டாங்க. ரெண்டு வருஷம் எங்கக் கல்யாணம் தள்ளிபோச்சு. அந்தமாதிரி சமயங்களில் ஆன்லைன் மூலமா ரெண்டு பேரும் பேசிகிட்டோம்.
கொரோனா ஊரடங்கு முடிஞ்சு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கல்யாணத்தை முறைப்படி நடத்துவதற்கான அனைத்து வேலைகளையும் மறுபடியும் தொடர்ந்தோம். ஆனால் அரசுத்தரப்பிலிருந்து பெறப்படவேண்டிய சான்றிதழுக்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஊரடங்கு காரணமாக நிலுவையில் இருந்ததால எங்கக் கல்யாணத்துக்கு தேவைப்படுற சான்றிதழ்கள் கிடைக்கிறதுக்கு காலதாமதமாச்சு.
அதுமட்டுமல்லாமல் பிலிப்பைன்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் வெளிநாட்டவர் ஒருவர், அந்நாட்டு பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் முறைப்படி கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணனும். பிற நாட்டு கலாச்சாரம், பழக்க வழக்கம், மதம், குடும்ப உறுப்பினர்கள் இது மாதிரியான சிக்கல்கள் பற்றி நிறைய தெளிவுரை சொல்லுவாங்க. அதற்கு அது எல்லாத்துக்கும் உடன்பட்டு சுயவிருப்பத்தின் பேரிலும் மணமகன், மணமகள் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்துவாங்க. இறுதியாக மணமகன் மனமகள் ரெண்டு பேர்கிட்டயும் தனித்தனியா கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் இருவருக்கும் இடையேயான புரிதல்கள் பற்றி சான்றிதழ் தருவாங்க. அதன்பிறகுதான் அந்நாட்டு பெண்கள் வெளிநாட்டவரை திருமணம் செய்து கொள்வதற்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்படும். அதேபோல மணமகன் தரப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய அபிடவிட் உள்ளிட்ட விஷயங்களும் ரொம்ப முக்கியம். இதையெல்லாம் தயார் செய்வதற்கு கடந்த 2021ம்ஆண்டு மே மாசமே நான் இந்தியா வந்துட்டேன்.
என்னோட தரப்பிலிருந்து எல்லா விஷயங்களையும் சரி செஞ்சு கல்யாணத்துக்கான நடவடிக்கைகளை மும்முரபடுத்தினோம். அனலிசாவ நானே நேர்ல போயி அழைச்சிட்டு வந்தேன். 2022 டிசம்பர் மாசம் அனலிசா இங்க வந்துட்டாங்க. நம்மநாட்டு சட்டப்படி சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருத்தரை திருமணம் செய்யணும்னா நடைமுறைக்காக ஒருமாதம் காத்திருக்கணும். அதற்குப்பிறகு தான் திருமணம் செஞ்சுக்க முடியும். அதனால ஒரு மாசம் காத்திருந்து 2023 பிப்ரவரில திருமணம் செஞ்சுக்கிட்டோம்.
மொத்தத்தில், நாங்கள் இருவரும் ‘காதலிக்கிறேன்’ என்று ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தாமலேயே கல்யாணம் செய்துகொண்டுள்ளோம் (சிரிக்கிறார்). இதுதான் எங்கள் காதல் கதை. எங்களுடைய திருமணத்திற்கு அனலிசாவோட தரப்பிலிருந்து யாரும் வர முடியல. அதற்கு காரணம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் அனலிசா குடும்ப உறுப்பினர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு இன்று வரையிலும் பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம்தான் காரணம். மற்றபடி இந்த திருமணம் இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் நடந்து முடிந்திருக்கிறது.
என்னுடைய மனைவி அனலிசா என் வீட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ரொம்பவும் ஒன்றிப் போயிட்டாங்க. தமிழில் ‘வணக்கம்’, ‘நன்றி’ அப்படிங்கிற சில வார்த்தைகள் மட்டும் அவங்களுக்கு பழக்கப்பட்டுருக்கு. மற்றபடி வேறு வார்த்தைகள் தெரியாது. அனலிசா நல்லா சமையல் பண்ணுவாங்க. இந்திய உணவு வகைகளில் பிரியாணி, மட்டன் கறி குழம்பு, அப்பளம் உள்ளிட்டவைகள் அவங்களோட ஃபேவரிட் லிஸ்ட். வீட்டுல பிலிப்பைன்ஸ் ஸ்டைலிலும் அப்பப்போ சமையல் நடக்கும். அதை எங்க வீட்டில் உள்ளவங்களும் ருசிச்சு சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
மற்றபடி, மதம் பின்பற்றுவது தொடர்பாக அவங்க முடிவுதான்.அனலிசா அவங்க வீட்டில் எப்படியோ அதைப்போலவே, இங்கேயும் சுதந்திரமாக தன்னுடைய பணிகளையும், கடமைகளையும் மேற்கொள்கிறார்” என புன்னகையோடு முடிக்க அருகே இருந்த அனலிசா அவரை அன்போடு கரம் பற்றிக்கொண்டார்.