2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எந்த கட்சியும் போட்டி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், திரிபுரா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும், அதன்பிறகு அங்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வடகிழக்கு மாநில தலைநகரங்கள் அனைத்தும் விமான மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதானி குழும விவகாரம் குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எதையும் மறைக்கவோ, அச்சப்படவோ இல்லை என பதிலளித்தார்.
பழமையான நகரங்களின் பெயர்களை மாற்றுவது மூலம் முகலாயர் வரலாற்றை அழிக்க நினைப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அவர் மறுத்தார்.