சென்னை: சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், அப்துல் கலாம் சிகிச்சை பகுதி மற்றும் தெற்காசியா-மத்திய கிழக்கு புரோட்டான் சிகிச்சை திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.
இதில், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை இணை நிறுவனர் ஏபிஜேஎம்ஜே.ஷேக் சலீம், அப்போலோ மருத்துவமனைகள் குழும ஆன்காலஜி மற்றும் இன்டர்நேஷனல் இயக்குநர் (ஆபரேஷன்ஸ்) ஹர்ஷத் ரெட்டி, அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் ஹரிஷ் திரிவேதி, மருத்துவ இயக்குநர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோய் துறைத் தலைவர் ராகேஷ் ஜலாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோயைக் குணப்படுத்த நவீன இயந்திரங்களுடன் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதும், அதற்கு அப்துல்கலாம் பெயரை வைத்துள்ளதும் பாராட்டுக்குரியது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, மருத்துவத் துறையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி, மக்களைப் பாதுகாத்து வருகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் அண்மையில் ஜப்பான் நாட்டுக்குச் சென்று, புற்றுநோய்க்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து தெரிந்துகொண்டு வந்துள்ளார்.
திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களின் பங்களிப்புடன், ரூ.60 கோடியில் புற்றுநோய் பிரிவு அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது கவலை அளிக்கிறது. பிறந்த குழந்தைக்குக்கூட புற்றுநோய் பாதிப்பு உள்ளது.
புற்றுநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், தென்னிந்தியாவிலேயே சிறப்பு மருத்துவமனையாக அப்போலோ செயல்பட வேண்டும். செய்தித் துறை சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகில் அப்துல்கலாமுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.