புதுடெல்லி: அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் மீதான அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், செபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பங்குச்சந்தையில் தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்யவும், ஏற்ற இறக்கங்களை சமாளிக்கவும் வலுவான கட்டமைப்புகள் மற்றும் சந்தை அமைப்புகளை செபி கொண்டுள்ளது. அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பாக உடனடியாக நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அந்த விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இப்போதே அவற்றை வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்காது.ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குச்சரிவு பத்திரச்சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம், ஹின்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனமாகும். இந்த ஷார்ட் செல்லிங்கை சட்டப்பூர்வ முதலீட்டு நடவடிக்கையாக அநேக சர்வதேச சந்தைகளும் அங்கீகரித்துள்ளன. இதனையும் கண்காணித்து, சந்தைகளின் மாறும் தன்மைக்கு ஏற்ப, தகுந்த விதிமுறைகளை உருவாக்கி, தேவைப்படும் சமயத்தில் அவற்றை புதுப்பித்து பங்கு சந்தையை செபி தொடர்ந்து ஒழுங்குபடுத்தி வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வரும் 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.