கள ஆய்வில் முதல்வர் திட்டம் | சேலத்தில் வட்டாட்சியர் அலுவலகம், ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார்  

சேலம்: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு நிர்வாக செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். இதன்படி இன்று (பிப்.15) காலை சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில், ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.

இன்று (பிப்.15) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள், சேலம் சரக டிஐஜி., மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா மற்றும் நான்கு மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

நாளை (பிப்.16) சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்துகிறார். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள், நிறைவுற்ற பணிகள், நலத்திட்ட உதவிகள், அரசின் சலுகை திட்டங்கள் குறித்து கலந்தாய்வில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுகிறார். மேலும், இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.