சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரித் துறை மற்றும் பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சார் பதிவாளர் சங்க மாநிலத் தலைவர் மு.மகேஷ் தலைமை வகித்தார்.
சென்னை மண்டலத் தலைவர் ஜெ.சரவணன், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் மா.கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சங்க நிர்வாகிகள் பேசியதாவது:
ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி, புரமோட்டர் அல்லாத ஏழை மக்களின் மனைகளைப் பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு எதிரான, மூன்றாவது மொழித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 80-ன்படி, பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்.
பதிவுத் துறையில் ஏற்கெனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்தப் பணிகளை ரத்து செய்ய வேண்டும். பணிகள் அனைத்தையும் அரசு நிறுவனங்களான நிக், எல்காட் மூலம் கணினிமயமாக்க வேண்டும்.
பொது கலந்தாய்வின் மூலம் பணியிட மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். உரிய காலத்தில் முறையாக பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈட்டிய ஒப்படைப்பு, அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
புதிய ஓய்தியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டகங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு நிர்வாகிகள் பேசினர்.