திருவள்ளூர்: சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் பட்டாபிராம் இருப்பு பாதையை கடக்க அமைக்கபடும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையிலிருந்து அம்பத்தூர், ஆவடி வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் பட்டாபிராம் பகுதியில் உள்ள இருப்பு பாதையை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2020 ஆண்டின் தொடக்கத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவடியிலிருந்து திருநின்றவூர் பகுதிக்கும் திருநின்றவூரிலிருந்து ஆவடி மற்றும் பிற பகுதிகளில் உள்ள கல்வி சாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேம்பாலம் அமைக்கும் பணியில் அணுகுசாலை சரிவர அமைக்கப்படாதது மற்றும் அரசு பேருந்துகள் சுற்றி செல்வது போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இருப்புப்பாதை பகுதியில் உள்ள கேட் மூடப்படுவதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதாலும் அணுகுசாலை சரியாக இல்லாததாலும் மிகுந்த அவதிக் குள்ளாவதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த பாலப் பணிக்குப்பின் தொடங்கப்பட்ட சேக்காடு ரயில்வே ஸ்டேஷன் சுரங்கப்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள், வியாபாரிகள், பணிக்கு செல்வோர் என பலரும் மேம்பாலப்பணியை விரைந்து முடித்திட வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது மார்ச் மாத இறுதிக்குள் ஒரு பகுதி பாலத்தையாவது பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அணுகுசாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.