முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்த இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே (51), 2024 -ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (76), ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான நிக்கி ஹாலே வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நானும் களமிறங்குவேன் என்று கூறியுள்ளார். டிரம்ப்பிற்கு போட்டியாக களம் இறங்க போவதாக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹாலே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அதோடு டிரம்ப் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், ‘இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும்’ என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.