தாராபுரம் ஆற்றில் உலவும் முதலைகள்; வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை: வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள்-பரபரப்பு

தாராபுரம்:  தாராபுரம் அமராவதி ஆற்றில் போக்கு காட்டி வரும் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் வலை விரித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு  வேடிக்கை பார்க்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் கடந்த 10 ஆண்டாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அப்போது அமராவதி ஆற்றில் கரை புரண்டு வந்த வெள்ளத்தால் அமராவதி அணையில் இருந்து அடித்து வரப்பட்ட 10 முதலைகள் தாராபுரம், சங்கரண்டாம் பாளையம், தாளக்கரை, மணலூர், ஆகிய பகுதி வழியே செல்லும் அமராவதி ஆற்றில் ஆழமான பகுதிகளில் தஞ்சமடைந்தன.

மேலும் அப்பகுதியிலேயே முகாமிட்டு இனப்பெருக்கமும் செய்துள்ளன. இதனால் அமராவதி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் தற்போது எத்தனை முதலைகள் உள்ளன? என்பதை கணக்கிட முடியவில்லை. இந்நிலையில் அலங்கியம் செல்லும் வழியில் உள்ள சீதக்காடு அமராவதி தடுப்பணையில் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று கரையோரம் ஒதுங்கி ஓய்வெடுத்தது. இதனை அவ்வழியாக சென்ற பலரும் நேரில் பார்த்து வீடியோ, போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.

இதேபோல பிப்ரவரி 2ம் தேதி தாராபுரம் அடுத்த தாளக்கரை கிராமத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் கரையோரம் ஓய்வெடுத்து கொண்டிருந்த முதலையை அப்பகுதி பொதுமக்கள்  நேரில் பார்த்து போலீசாருக்கு தகவல் கூறினர். தற்போது அமராவதி ஆற்றின் நகராட்சி நீரேற்று நிலையம் அருகில் தடுப்பணைக்கும் பழைய பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ராட்சத முதலை தென்பட்டுள்ளது. இந்த முதலை சுமார் 12 அடி நீளமும், அதிக எடையும் கொண்டதாக இருந்தது. அது அமராவதி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் வரும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதையடுத்து தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், ஆணையர் ராமர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அமராவதி ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை அமைத்தனர். இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி தேஜாஸ்ரீ, காங்கயம் வனச்சரக அலுவலர் தனபால் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ராட்சத வலைகளுடன் அமராவதி ஆற்றில் நேற்று இறங்கி தேடுதல் வேட்டை நடத்தினர். இப்பணியை தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், ஆணையர் ராமர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு வனத்துறையினருக்கு உதவி செய்தனர்.

முதலை தேடுதல் வேட்டையை பார்க்க அமராவதி ஆற்றின் பாலத்தின் மீதும் பாலத்தின் கீழ்புறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் கூறுகையில், ‘‘ஆற்றில் உலா வரும் முதலைகளை பிடிக்க வனத்துறைக்கு தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும். இதற்கு கூட்டம் கூடாமல் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என தெரிவித்தார்.

முதலைக்கறி விற்பனையா?
கடந்த 8 ஆண்டுக்கு முன் அமராவதி சீதக்காடு பகுதியில் முகாமிட்டிருந்த முதலைகளில் ஒன்றை அப்பகுதியினர் சிலர் கன்னி வைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து, ஆண்மை குறைவுக்கு சிறந்த மருத்துவ பொருள் என கூறி அதன் இறைச்சியை 1 கிலோ 1000 ரூபாய் என விற்றதாகவும், தாராபுரம், அலங்கியம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியின் எல்லையோர கிராமங்களில் விற்பனை நடந்ததாகவும் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.