திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் வரும் 16ஆம் தேதி (நாளை) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மூன்று மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் முடிவு மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 25 வருடங்களாக திரிபுராவை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சியமைத்தது. பாஜக முதல்வராக மாணிக் சகா உள்ளார். இந்தநிலையில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த தேர்தலில் மும்முனை போட்டியாக களம் உருவாகியிருக்கிறது. ஆளும் பாஜக மற்றும் ஐபிஎஃப்டி கூட்டணி அமைந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு அணியில் நிற்கின்றனர். மூன்றாவதாக திப்ரா மோதா என்ற கட்சி உள்ளது. அதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது.
திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (IPFT) உடன் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட பாஜக அந்த கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே வாரத்தில் இரண்டு முறை பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் திரிபுராவில் நீண்டநாள் முதலமைச்சராக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக் சர்கார், பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘கேரள மாநிலத்தில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகள் இங்கு நண்பர்களாகிவிட்டதாகக் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் சிபிஐ(எம்) தலைமையிலான முன்னணி ஆட்சியை நடத்தி வருவது உண்மைதான். அங்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது.
ஆனால் திரிபுராவில் இல்லாத ஜனநாயகம் அங்கு துடிப்பாக உள்ளது. பாஜக இங்கு அரசியல் சட்டத்தை பின்பற்றவில்லை, பாசிச ஆட்சி நடக்கிறது. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணியால் பிரதமர் அமைதி இழந்ததாகத் தெரிகிறது. வடகிழக்கு மாநிலத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. பாஜக கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அரசியல் சட்டத்தை இங்கு பின்பற்றவில்லை. இவையனைத்தும் உங்கள் விருப்பப்படியே நடக்கின்றன.
பாஜகவின் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் வாக்கு வங்கி தேர்தலுக்கு உட்பட்ட மாநிலத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தேர்தல் புரிந்துணர்வு பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதைத் தவிர்க்கும்.
ஐஐடிகளில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை; சாதி பாகுபாடு காரணமா.?
தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு முறை மாநிலத்திற்கு பிரதமர் சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஆனால் 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தை செயல்படுத்துவது பற்றி குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டார். தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் தனது பிரச்சாரத்தின் போது வாக்குறுதிகள் குறித்து மோடி மௌனம் சாதித்து வருகிறார்’’ என அவர் கூறினார்.