துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்கு 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களை பாதித்தது. நிலநடுக்கம் தாக்கிய காசியான்டெப் நகரம் அண்டை நாடான சிரியாவின் எல்லையையொட்டி அமைந்திருப்பதால் இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 31 ஆயிரத்து 974 பேரும், சிரியாவில் 5 ஆயிரத்து 800 பேரும் உயிரிழந்துள்ளர்.. இது தவிர இரு நாடுகளிலும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்..
சர்வதேச நாடுகள் அனுப்பிவைத்த மீட்பு குழுக்களின் உதவியுடன் இரு நாடுகளிலும் ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் அதிசயத்தக்க வகையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (14) துருக்கியின் ஹடே மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 201 மணி நேரத்துக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 26 வயது இளம் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய துருக்கியில் மட்டும் இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.