துருக்கி துயரம் | ஊரைச் சுற்றும் துர்நாற்றம்; இன்னமும் கேட்கும் மெல்லிய அபயக் குரல்கள்; பலி 41,000ஐ கடந்தது

அங்காரா: துருக்கியில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவான அந்த பூகம்பம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பூகம்பம் நிகழ்ந்து 10 நாட்களை நெருங்கும் சூழலில் ஊரெங்கும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மலைபோல் கட்டிடக் கழிவுகள் குவிந்துகிடக்க இன்னமும் சில இடிபாடுகளுக்கு அடியிலிருந்து அபயக் குரல்கள் கேட்கின்றன.

துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சல்மான் அல்தீன் என்பவர், “நான் அன்டாக்கியா பகுதியில் கடந்த ஒரு வாரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். நான் இத்தனை மரணங்களையும் இவ்வளவு உடல்களையும் என் ஆயுளில் பார்த்ததிலை. அர்மகடான் படத்தில் வரும் காட்சிகள் போல் இங்கே நிலைமை இருக்கிறது. இந்த நகரம் முழுவதுமே பிண துர்நாற்றம் வீசுகிறது” என்று அழுகையுடன் தெரிவித்தார்.


— Presidency of the Republic of Türkiye (@trpresidency) February 14, 2023

41 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை: பூகம்பத்தால் துருக்கி மற்றும் சிர்யாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்பதைக் காட்டிலும் வீடின்றி உறைபனியில் உயிருடன் தவிப்போருக்கு உதவிகளைச் செய்வதில் மீட்புக் குழுவினரின் கவனம் திரும்பியுள்ளது. ஆனாலும் தெற்கு துருக்கியில் ஆங்காங்கே இடிபாடுகளுக்கு இடையே இருந்து இன்னும் மெல்லிய அபயக் குரல்கள் கேட்பதாக மீட்புக் குழுவினர் கூறுகின்றனர். அவ்வாறு கேட்கும் பகுதிகளில் மீட்புக் குழுவினர் உதவிகளைச் செய்து வருகின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை துருக்கியில் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 77 வயது முதியவர் 18 வயது இளைஞர் உள்பட 9 பேர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன், “இப்போது இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இயற்கைப் பேரிடரை துருக்கி எதிர்கொண்டுள்ளது. இது மனித குலத்திற்கே ஒரு சவால் தான். எங்கள் நாடின் ஒவ்வொரு குடிமகனுக்கு தேவையான பொருள் மற்றும் நிதியுதவியையும், உணர்வுப்பூர்வ ஆறுதலையும் தருவோம்” என்றார்.

மன அழுத்தத்தில் தவிக்கும் குழந்தைகள்: துருக்கி, சிரியாவில் குழந்தைகள் பலரும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் தாங்கள் வாழ்ந்த வீடு, உடைமைகளை இழந்து தெருக்களில் தஞ்சமடைந்தது, மிகப் பெரிய சத்தம், கட்டிட இடிபாடுகள் என அவர்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் அலெப்போ நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தூக்கத்தில் திடீரென அலறி எழுந்து “அப்பா நிலநடுக்கம்.. நிலநடுக்கம்” என்று அழுவதாக அவருடைய தந்தை ஹசன் மோஸ் கூறுகிறார். துருக்கி, சிரியாவில் 7 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. துருக்கி, சிரியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பூகம்ப பாதிப்பு பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். அப்பகுதிகள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

சிரியாவுக்கு உதவி: முன்னதாக நேற்று ஐ.நா. சபை சிரியாவுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்ய 397 மில்லியன் டாலர் தேவைப்படுவதாகவும் உலக நாடுகள் தாராளமாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத், துருக்கி மற்றும் வடமேற்கு சிரியா இடையேயான பாப் அல் சலாம், அல் ரா ஆகிய இரண்டு எல்லைகளை திறந்துவிட முடிவு செய்துள்ளார். எல்லைகளில் நிலவும் கெடுபிடி காரணமாக சர்வதேச உதவிகள் சிரியாவுக்கு சென்று சேர்வதில் சிக்கல் நிலவிய சூழலில் அதிபர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.