பொள்ளாச்சி: பொள்ளாச்சி பஸ் நிலையத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். பொள்ளாச்சி பழைய பஸ்நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையம் (மத்திய) அருகருகே உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் தினமும் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால், பஸ் நிலையத்தில் தொடரும் ஆக்கிரமிப்பால் பயணிகள் அமர்வதற்கு கூட இடம் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.
பஸ் நிலையத்தை சுற்றிலும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு மற்றும் விதி மீறி ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால், பயணிகள் கடும் அவதியடைகிறார்கள்.இதில், மத்திய பஸ் நிலையம் வெளியே பாலக்காடு ரோட்டோரம் ஆக்கிரமிப்பு தொடர் கதையாக உள்ளது. இதனை அப்புறப்படுத்தி முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் கடைகள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி பயணிகள் நிற்கும் பகுதியை கடைகளை விரிவுபடுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்வதற்காக போடப்பட்ட சாய்வு பாதையையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், தடுப்பு சுவரில் பயணிகள் அமர்ந்து செல்லும் அவலம் உண்டாகிறது.
நகரில் உள்ள இரு பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகள் சிரமமின்றி இருக்க ஆக்கிரமிப்புகளை அக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற புகார் தொடர்கிறது. எனவே, புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பஸ் நிலையத்தின் வெளியே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்து நேரிடுவதை தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.