புதுடெல்லி: பிபிசி இந்தியா நிறுவனத்திற்கு எதிரான வருமானவரித் துறையினரின் சோதனை டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்தது. அந்நிறுவனத்தின் நிதி தரவுகள் தொடர்பான மின்னணு மற்றும் காகித ஆவணங்களை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் பிபிசி அலுவலகத்தில் தங்களது சோதனையைத் தொடங்கினர். இரவு முழுவதும் நீடித்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது.
பிபிசியின் நிதித்துறை, வேறு சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடந்தினர். என்றபோதிலும் பிற ஊழியர்கள், பத்திரிக்கையாளர்களை வெளியேற அனுமதித்தனர்.
முன்னதாக, சோதனையின் போது அங்கு இருந்த பிபிசி செய்தியாளர்கள், ஊழியர்களின் செல்போன், லேப்டாப்களை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர். சர்வதேச வரி விதிப்பு, பிபிசி துணைநிறுவனங்களின் பரிமாற்ற விலை தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த ஆய்வுகள் தொடர்பாக, வருமானவரித் துறையிடமிருந்து எந்த அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை. பிபிசி நிறுவனம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை: இதற்கிடையில் பிபிசி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் ஒன்றில், ஒளிபரப்புத்துறை ஊழியர்களைத் தவிர மற்ற துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும், ஊழியர்கள் தனிப்பட்ட வருமானம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். மற்றபடி ஊதியம் தொடர்பாக கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் விரிவான பதில் அளிக்க வேண்டும், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.