வாஷிங்டன் : அடுத்தாண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், கேரளாவை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் விவேக் ராமசாமி 37, போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடக்கவுள்ளது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 76, ஏற்கனவே அறிவித்து விட்டார்.
அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும்குடியரசு கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.
இந்நிலையில் குடியரசு கட்சியின் மூத்த நிர்வாகியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் வேட்பாளர் போட்டியில் குதிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதற்காக கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் பிரசாரத்தை இன்று அவர் துவக்கவுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழில் அதிபர் விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட ஆதரவு திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக அயோவா உள்ளிட்ட சில மாகாணங்களில் ஏற்கனவே இவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
பூர்விகம்
இவரது பெற்றோர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். தந்தை விவேக் கணபதி அமெரிக்காவில் எலெக்ட்ரிகல் இன்ஜினியராக உள்ளார். தாய் கீதா ராமசாமி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மகனாக விவேக் ராமசாமி, சின்சினாட்டியில் பிறந்தார். ஹார்வர்ட் பல்கலையில் இளங்கலை பட்டம் முடித்த இவர், யேல் பல்கலையில் சட்டம் பயின்றார்.
பயோடெக் தொழில்முனைவோராக முதலில் விவேக் ராமசாமி பிரபலம் அடைந்தார். இவர் தயாரித்த 5 மருந்துகளுக்கு எப்டிஏ எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது. இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர்களுக்கும் மேல் அதிகம் என தெரிகிறது.
கடந்த 2014 ல் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி வெற்றிகரமாக நடத்தினார். அதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்கள் வருமானம் கிடைத்தது.விவேக் ராமசாமி அமெரிக்காவில் ‘ரொய்வாண்ட் சயின்ஸ்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.
‘ஸ்டிரைவ் அசெட்ஸ் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். குறுகிய காலத்திலேயே இவரது நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியதால் தற்போது பல நுாறு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக உள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை இளம் தொழில்முனைவோர்கள் பட்டியலிலும் இவர் இடம் பிடித்துஉள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போது கடும் போட்டி நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்