நாக்பூரிலிருந்து 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று, 13 நாள்களைக் கடந்த பிறகும் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை வந்தடையவில்லை என்று தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை அருகிலுள்ள கசாரா என்ற இடத்தில்தான் ரயில் காணாமல்போனது. இது குறித்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், சரக்கு ரயில் விவகாரம் தொடர்பாக மத்திய ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
“சரக்கு ரயில் 90 கன்டெய்னர்களுடன் காணாமல்போனதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. சரக்கு ரயிலை திட்டமிட்டபடி கன்டெய்னர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது. சம்பந்தப்பட்ட சரக்கு ரயில் பிப்ரவரி 1-ம் தேதி புறப்பட்டு, 5-ம் தேதி புஷாவல் மண்டலத்திலுள்ள செகாவ் என்ற ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்கிருந்து ரயில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.
இது தொடர்பாக வெளியான செய்தி தவறானது. செய்திகளை சரியாக விசாரித்து வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம். தவறான செய்தி எப்படி வெளியானது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மிக்கேலிடம் கேட்டதற்கு, “90 கன்டெய்னர்களுடன் சரக்கு ரயில் நாக்பூரிலிருந்து புறப்பட்டு மிகவும் குறைவான வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
ரயில் சிக்னலுக்காக அடிக்கடி ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டபோது யாரோ ரயில் காணாமல்போய்விட்டதாக தவறான தகவலைக் கொடுத்திருக்கின்றனர். 90 கன்டெய்னர்களுடன் எப்படி ரயில் காணாமல்போகும்” என்றார்.
கன்டெய்னர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட ரயில் மும்பை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. ரயில் காணாமல்போனதாக எங்கள் தரப்பிலிருந்து எந்தவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.