திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் | 81 சதவீத வாக்குப்பதிவு – காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 81% வாக்குகள் பதிவாகின.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து, திரிபுராவில் பிப். 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப். 27-ம் தேதியும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரியில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, திரிபுராவில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் 28.12 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில காவல் துறையைச் சேர்ந்த 31,000 பேரும், மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 25,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திரிபுராவில் தற்போது மாணிக் சாஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு போட்டியாக, கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

ஆளும் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

திரிபுராவில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பிரத்யோத் கிஷோர் மாணிக்யா தேப் வர்மா, 2019-ல் திப்ரா மோர்த்தா என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பழங்குடி மக்களிடம் திப்ரா மோர்த்தா கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. மேலும், திரிணமூல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஒட்டுமொத்தமாக திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 20 பேர் பெண்கள். ஆளும் பாஜக, கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கூட்டணி, திப்ரா மோர்த்தா கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகஇருந்தது. முதல்வர் மாணிக் சாஹா, தலைநகர் அகர்தலாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவர், டவுண் பார்டோவாலி தொகுதியில் போட்டியிடுகிறார். கக்ரமான தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நேரிட்ட வன்முறையில் இருவர் காயமடைந்தனர். இதேபோல, பல்வேறு பகுதிகளில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் உள்ளூர் தலைவர்கள் சந்தன் தாஸ், ஷிபான் மஜும்தார் உள்ளிட்டோர் காய மடைந்தனர்.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “பாஜகவினர் எதிர்க்கட்சியினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 60 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஜிஷ்ணு தேவ் வர்மா மறுத்துள்ளார். இதற்கிடையில், பாஜக, காங்கிரஸ் சார்பில் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகள் தொடர்பாக, நடத்தை விதிகளை மீறியதாக அக்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி கிரண் குமார் கூறும்போது, “மாநிலத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 81.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன” என்றார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வரும் மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.