இஸ்லாமாபாத்: பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது. இது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்துள்ளதால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தான் கூடுதல் கடனுதவி கேட்டுள்ளது. இதற்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதால், அவற்றை பாகிஸ்தான் அரசு பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
இதற்காக கூடுதல் நிதி மசோதாவை பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த மசோதா, மினி பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பது மற்றும் வரி வசூலை அதிகரிப்பதை மினி பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், மினி பட்ஜெட் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், எரிபொருள் விலையை வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் உயர்த்தியுள்ளது. ஐஎம்எஃப் அமைப்பை திருப்திபடுத்தும் மற்றொரு முயற்சியாக இது கருதப்படுகிறது.
இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கும், ஹை-ஸ்பீடு டீசல் விலை ரூ.17.20 உயர்த்தப்பட்டு ரூ.280-க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.12.90 உயர்த்தப்பட்டு ரூ.202.73-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதால், இவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசின் நிதித் துறை விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இது மக்களை பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஐஎம்எஃப் அமைப்பிடம் இருந்து கடனுதவி பெறுவதால் மட்டும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீண்டு விடலாம் என்று கூறமுடியாது என ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது.