மீண்டும் ஒரு குடிமகன்களின் கதை
மது பழக்கத்தால் வரும் தீமைகளை விளக்கி ஏராளமான படங்கள் வந்துள்ளன. தேங்காய் சீனிவாசனின் 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' முதல் கமலக் கண்ணனின் 'மதுபானக்கடை' வரை நிறைய படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது 'கிளாஸ்மேட்ஸ்'.
இந்த படத்தை முகவை பிலிம்ஸ் சார்பில் அங்கையர் கண்ணன் தயாரித்து, நாயகனாக நடிக்கிறார். குட்டிப்புலி படத்தில் காமெடியனாக நடித்து புகழ்பெற்ற சரவண ஷக்தி இயக்கி அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பரணா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இதுதவிர மயில்சாமி, சாம்ஸ், டி.எம்.கார்த்திக், அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அபி நட்சத்திரா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
“இது பிரச்சார படமோ, விழிப்புணர்வு படமோ அல்ல. குடிமகன்கள் பக்கம் நின்று பேசும் படம். ஒருவன் ஏன் குடிகாரனாக மாறுகிறான், அதனால் அவனது குடும்பத்திற்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் என்ன மாதிரியான பிரச்சினைகள் வருகிறது என்பதை குடிமகன்களுக்கு எடுத்துச் சொல்வது மாதிரியான படம்.
அளவாக மது அருந்தும்போது அது ஒரு சாதாரண பழக்கம் அவ்வளவுதான். அதுவே அளவுக்கு மீறும்போதுதான் பிரச்சினை. அதைத்தான் படம் பேசுகிறது. 90 சதவிகித ஆண்கள் மது அருந்துகிறார்கள். இவர்களை திருத்தி மது அருந்துவதை தடுப்பது இயலாத காரியம். குறைந்த பட்சம் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இந்த படம் முயற்சிக்கிறது” என்கிறார் இயக்குர் சரவண ஷக்தி.