ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50 சதவீத நெல் அறுவடை பணிகள் முடிந்த பின் தொடங்கப்பட்ட அரசு கொள்முதல் மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே பெய்த தொடர் மழை காரணமாக பெரும்பாலன கண்மாய்களில் நீர்இருப்பு அதிகரித்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதையெடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் கொள்முதல் மையம் ஏற்படுத்த வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
தை மாத தொடக்கத்திலேயே அறுவடை ஆரம்பித்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் நீர்வளத்துறை கட்டிடத்தில் நேற்று முன்தினம் தற்காலிக நெல் மையம் திறக்கப்பட்டது. அந்த கட்டிடத்தில் மின் இணைப்பு வசதி இல்லாததால் நெல் கொள்முதல் தொடங்கவில்லை. மேலும் அப்பகுதியில் குடோன், தார்ப்பாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, ‘ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள வாழைக்குளம், வேப்பங்குளம், ரெங்கப்பநாயக்கன்குளம், இடையன்குளம், பெரியகுளம் ஆகிய கண்மாய் பாசன விளை நிளங்களில் 50 சதவீதம் நெல் அறுவடை பணிகள் நிறைவடைந்துவிட்டது. கடந்த ஆண்டு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று அதிகாரிகள் அனுமதி மறுத்த இடத்தில் தற்போது கொள்முதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மின் இணைப்பு இல்லாததால் நெல் கொள்முதல் தொடங்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘மின் வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்துவிட்டனர். மின்இணைப்பு இன்று பெறப்பட்டு, கொள்முதல் தொடங்கும்’ என்றனர்.